புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஆக.8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பாஜ எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவினர் இந்த சட்ட திருத்த மசோதா குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். கடைசியாக ஜன.21ம் தேதி ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்த கூட்டத்தை ஜன.30 மற்றும் 31ல் வைக்க திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ஆனால் திடீரென நேற்று கூட்டுக்குழு கூட்டப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழு ஆய்வு நடவடிக்கைகளை விரைவாக முடிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கூட்டுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டனர்.
அரசியல் காரணங்களுக்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கூட்டுக் குழுவின் அறிக்கையை இறுதி செய்யும் நோக்கில் பாஜ செயல்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். இந்த கருத்து மோதல் காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவேளைக்கு பின்னர் ஸ்ரீநகர் ஜமியா மஜித் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பரூக் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகினர்.
அப்போது எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே முன்மொழிந்தார். இந்த தீர்மானம் கூட்டுக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து திமுக எம்பிக்கள் ஆ.ராசா, முகமது அப்துல்லா, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கல்யாண் பானர்ஜி, நதீம்-உல் ஹக், காங்கிரஸ் எம்பிக்கள் முகம்மது ஜாவேத், இம்ரான் மசூத், சையத் நசீர் ஹுசைன், சமாஜ்வாடி கட்சி எம்பி மொகிபுல்லா, சிவசேனா உத்தவ் கட்சி எம்பி அரவிந்த் ஸ்வாந்த் ஆகியோர் ஒரு நாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது இறுதி அறிக்கையை ஜனவரி 29ம் தேதி ஏற்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
* ‘தேர்தல் ஆதாயம் பெற பாஜ முயற்சி’
திமுக எம்.பி ஆ.ராசா நிருபர்களிடம் கூறுகையில், “இரவோடு இரவாக கூட்டத்தின் விவாத பொருள் மாற்றப்பட்டது. அதாவது குறிப்பாக சரத்து வாரியாக விவாதம் நடத்த முடியாது என உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்தோம். அப்போது, கூட்டுக்குழு தலைவருக்கு அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.
அதன் அடிப்படையில்தான் எங்களை சஸ்பெண்ட் செய்தார். இதில் இவ்வளவு அவசரமாக மசோதாவை இறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பது என்பது டெல்லி பேரவை தேர்தலுக்காகதான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜ முயற்சிக்கிறது” என்றார்.
The post வக்பு மசோதா குறித்த விவாதம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பரபரப்பு appeared first on Dinakaran.