டெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய வரைவு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
32 பக்க எதிர்ப்பு அறிக்கை குழுவிடம் அளித்துள்ளோம்: ஆ.ராசா
32 பக்க எதிர்ப்பு அறிக்கையை கூட்டுக்குழுவிடம் அளித்துள்ளோம். வக்பு வாரிய சட்டத்தில் காங்கிரஸ் அரசால் செம்மைப்படுத்தப்பட்ட பிரிவுகள் அனைத்தையும் திருத்தியுள்ளனர் என கூறினார்.
இஸ்லாமியருக்கு பாதுகாப்பு தரும் பிரிவுகள் நீக்கம்: ஆ.ராசா
இஸ்லாமியர் பாதுகாப்பை உறுதி செய்ய மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவந்த பிரிவுகள் திருட்டுத்தனமாக நீக்கப்பட்டுள்ளன. வக்பு வாரிய சொத்துகளை அரசுடைமையாக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் – வழக்கு தொடரப்படும்: ஆ.ராசா
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். முதல்வர் அறிவுறுத்தலின்படி இஸ்லாமியர் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். எதிர்க்கட்சிகள் கொடுத்த எந்த திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. வக்பு சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறும் சூழலை உருவாக்க பாடுபடுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
The post வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி appeared first on Dinakaran.