டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டம் காரணமாக பதவி விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அங்கு மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்ஒரு பகுதியாக, ஷேக் ஹசீனாவின் முன்னோர்கள் வாழ்ந்த கோபால்கஞ்ச் நகரிலும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று பேரணி தொடங்கியது. அப்போது அங்கு திரண்ட அவாமி லீக் கட்சியினர் பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களை தீயிடடு கொளுத்தினர். மேலும் பேரணிக்கு பாதுகாப்பாக சென்ற காவல்துறையினர் மீதும் அவாமி லீக் கட்சியினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து கோபால்கஞ்ச் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியினர், போலீசார் பயங்கர மோதல்: 4 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு appeared first on Dinakaran.