புதுடெல்லி: மக்களவையில், தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இந்த கேள்வி நட்சத்திர கேள்வி என்பதால் அதன்மீது தமிழச்சி தங்கபாண்டியன் துணைக்கேள்வியும் கேட்டார். அதாவது, “தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள்.
ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.பில் உருவாக்கப்படுவதாக இருந்தாலும், அந்த ரயில்களில் வட இந்திய உணவுகளே வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் புறக்கணிக்கப்படுகிறது. ரயில் உணவக தொழிலாளர்கள் இந்தியிலேயே பெரும்பாலும் பேசுகிறார்கள். இது பயணிகளுக்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் கட்டாயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச வேண்டும். மேலும் மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு நேரடி வந்தேபாரத் ரயில்கள் இயக்க வேண்டும்” என கேட்டார். இதற்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்கையில், “ பயணிகளுக்கு உள்ளூர் உணவுகளை வழங்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் பயணிகளுக்கு உள்ளூர் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விரிவுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
நிதி ஒதுக்கீட்டில் காலதாமதம்; கிராமப்புற மக்களை பாதிக்கும்
மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஒன்றிய அரசை வலியுறுத்தி நேற்று பேசியதில், ‘‘தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 91 லட்சம் மக்களுக்கு உயிர்நாடியாக உள்ளது. அதில் 86 சதவீத வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே போன்று கிட்டத்தட்ட 29 சதவீத தொழிலாளர்கள் எஸ்.சி மற்றும் எஸ்டி பிரிவு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த முக்கியமான திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் தமிழ்நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக தொழிலாளர்களுக்கான ஊதியம் ரூ.4,034 கோடி நிதி ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. இந்தத் தாமதம் கிராமப்புற குடும்பங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்றார்.
The post வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள்: மக்களவையில் திமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.