ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் உலக அழகி போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வருகிற மே 7 முதல் 31ம் தேதி வரை 72வது சர்வதேச உலக அழகிப் போட்டி நடக்கிறது. இந்த உலக அழகிப் போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகளும், உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இதன் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி வரும் மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாகப் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் மே மாதம் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு, அகில இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பு, அகில இந்திய மகிளா சமஸ்கிருதி சங்கதன் ஆகிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெண்களை நுகர்வுப் பொருட்களாகச் சித்தரிக்கும் முயற்சிக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. மாநில அரசு தலையிட்டு இந்தப் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அழகி போட்டியானது, ஆயிரக்கணக்கான கோடி லாபத்தை இலக்காகக் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களின் நலனுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய மகிளா சமஸ்கிருதி சங்கதன் மாநில அமைப்பாளர் ஹேம லதா சுட்டிக்காட்டினார். இந்தப் போட்டிக்கு 54 கோடி ரூபாய் செலவழிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளதாகவும், பெண்களின் அழகை அளவீடுகள் மூலம் வரையறுப்பது தவறான கருத்து என்றும், இது பெண்களின் கண்ணியத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து தெலங்கானா சுற்றுலாத் துறைச் செயலாளர் ஸ்மிதா சபர்வால் கூறுகையில், ‘தெலங்கானாவின் கலாசாரம், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உலகிற்குக் காண்பிக்கும் வகையில், உலக அழகி போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கு ஓபன் டிக்கெட்டுகள் விற்கப்படாது. அழைப்பிதழில் இருப்பவர்கள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், சாதனையாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள் ஆகியோரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்’ என்றார்.
The post வருகிற மே 7 முதல் 31ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கும் உலக அழகி போட்டிக்கு எதிர்ப்பு: பல்வேறு அமைப்புகள் கண்டனம் appeared first on Dinakaran.