ஜெய்ப்பூர்: வழக்கை முடித்து வைக்க லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்த நவல் கிஷோர் மீனா என்பவர், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்து வந்தார். அந்த வழக்கில் தொடர்புடைய புகார்தாரருக்குச் சாதகமாக வழக்கை முடித்து வைப்பதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் ₹8 லட்சம் லஞ்சமாக நவல் கிஷோர் மீனா கேட்டுள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி சிபிஐ-யிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற சிபிஐ அதிகாரிகள், லஞ்ச கேட்ட அமலாக்கத்துறை அதிகாரியை பொறி வைத்து கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டனர். அதன்படி, புகார்தாரர் லஞ்சப் பணத்தின் முதல் தவணையான ₹4 லட்சத்தை நவல் கிஷோர் மீனாவிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, விரிவான விசாரணை நடத்தி, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், தற்போது நவல் கிஷோர் மீனாவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, மூன்றாண்டு காலக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ₹5.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கி மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வழக்கை முடித்து வைக்க லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.