புதுடெல்லி: “நாட்டில் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் நேற்று தொடங்கியது. மக்களவை காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முரண்பாடுகள் இருந்துள்ளன. இதுகுறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன” என்று வலியுறுத்தினார்.