புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 8 எம்எல்ஏக்கள் விலகியது டெல்லி தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 5ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் முடிவோடு தேர்தலை ஆம்ஆத்மி எதிர்கொள்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரசும் ஆம்ஆத்மியும் இருந்தாலும் கூட, டெல்லி தேர்தலில் இருகட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
ஆட்சியை கைப்பற்ற பாஜக கடுமையாக பிரசாரம் செய்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்எல்ஏக்கள், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். கட்சியில் இருந்து விலகி உள்ள எம்எல்ஏக்கள் மாற்று கட்சியோடு தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவி விலகிய 8 எம்எம்ஏக்களும் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவாலிடம் தங்களது ராஜினாமா முடிவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பாலம் எம்எல்ஏ பாவனா கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், திரிலோக்புரி எம்எல்ஏ ரோஹித், ஜானக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, மெஹ்ரவுலி எம்எல்ஏ நரேஷ் யாதவ், ஆதர்ஷ் நகர் எம்எல்ஏ பவன் சர்மா மற்றும் பிஜ்வாசன் தொகுதி எம்எல்ஏ பி.எஸ்.ஸூன், மடிப்பூர் எம்எல்ஏ கிரிஷ் சோனி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதில் நரேஷ் யாதவ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால் தேர்தலில் இருந்து விலகினார்.
ஆம்ஆத்மியில் இருந்து விலகிய மேற்கண்ட 8 எம்எல்ஏக்களுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அதனால் தற்போது ஆம்ஆத்மியில் இருந்து விலகி உள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ நரேஷ் யாதவ் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே குழுவில் இருந்து உருவானது தான் ஆம் ஆத்மி கட்சி. இக்கட்சியின் நோக்கம் அரசியலில் இருந்து ஊழலை அகற்றுவதாகும். ஆனால் தற்போது ஆம் ஆத்மி கட்சியால் ஊழலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.
மாறாக, ஆம் ஆத்மி கட்சி ஊழலின் புதைகுழியில் சிக்கியுள்ளது’ என்று கூறினார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் திடீரென விலகியதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 8 எம்எல்ஏக்களும் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் டெல்லி தேர்தல் களம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில் ஆம்ஆத்மியில் இருந்து 8 எம்எல்ஏக்கள் விலகியது ஏன்?: டெல்லி தேர்தலில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.