சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசியதாவது:
மீனவர் களுடைய நலன் என்று வருகின்றபொழுது, அவர்கள் குஜராத்தைச் சார்ந்தவர்களா, தமிழகத்தை சார்ந்தவர்களா என்ற வேறுபாட்டினை ஒருபோதும் மத்தியில் இருக்கின்ற பிரதமரோ, பாஜ அரசாங்கமோ பார்ப்பதில்லை.
அன்று கச்சத்தீவு தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஓர் அறிக்கை வெளியிடுகின்றபொழுது, திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மறைந்த இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் எல்லாம் கடுமையான வாதத்தை முன்வைத்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாஜ கட்சியினுடைய முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று சொல்லி அவர்களுக்கு ஆதரவாக, கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என்று பேசியுள்ளார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள் முதல் பாஜ இது தவறு என்று குரல் கொடுத்து வருகிறது. அதேசமயம், அதிகாரத்தில் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் அதை தவற விட்டு விட்டு, ஆட்சியில் இல்லாதபோதெல்லாம் இதைப்பற்றி பேசுகிறோமோ என்கின்ற எண்ணமும் எங்களுக்கு வராமல் இல்லை. அமைச்சர் துரைமுருகன்: அன்றைக்கு ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் இந்த விவகாரத்தை செய்திருக்கிறார்கள் என்று பத்திரிகையில் தலையங்கமே எழுதியது. அமைச்சர் எஸ்.ரகுபதி: கலைஞர் தெளிவாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து என்னை யாரும் கன்செல்ட் செய்யவுமில்லை. நான் கன்சென்ட் கொடுக்கவுமில்லை என்று அவருக்கே உரித்தான பாணியில் சொல்லியிருக்கிறார்.
துரைமுருகன்: நான் சவால் விடுகிறேன். கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து அன்றைக்கு கலைஞரிடம் பேசவேயில்லை. கலைஞர் ஆத்திரப்பட்டு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுத்து, மறுநாளே டெல்லிக்கு சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசி பார்த்தார். அவர், கவனிக்கிறேன் என்கிற வார்த்தையைச் சொன்னார். அவை பற்றியெல்லாம் 1974ம் ஆண்டு நான் இந்த அவையில் உறுப்பினராக இருந்தபோது பேசப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அந்த கூட்டத்தில் கலைஞரோடு கலந்து கொண்டவன் நான்.
சபாநாயகர் அப்பாவு: கச்சத்தீவை மீட்டுக் கொடுப்பீர்களா, கொடுக்க மாட்டீர்களா? அதை மட்டும் சொல்லிவிட்டு, அமருங்கள். வானதி சீனிவாசன்: தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழ்நாட்டினுடைய அத்தனை மீனவர் சங்க பிரதிநிதிகளோடு வெளியுறவுத்துறை அமைச்சரை 13ம் தேதி சந்தித்து, இதுதொடர்பாக விரிவான ஆலோசனையை நடத்த இருக்கிறார். கச்சத்தீவு விஷயத்தில், எங்களுடைய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இருந்து நாங்கள் உணர்வோடு, அதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக இந்த தீர்மானத்தை பாஜ ஆதரிக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post வானதி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்; அன்றைய முதல்வருக்கு தெரியாமலே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது appeared first on Dinakaran.