திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப் மூலம் ஒரு லிங்க் வந்தது. அவர் அந்த லிங்கில் கிளிக் செய்து பார்த்தபோது, பணம் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் இரு மடங்காக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பி அந்த வாலிபர் பல தவணைகளாக ரூ.46 லட்சம் வரை முதலீடு செய்தார். ஆனால் பணம் போனதே தவிர திரும்பக் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்த வாலிபர் மட்டாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஆன்லைன் மூலம் வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது எர்ணாகுளம் பெரிங்காலா என்ற பகுதியைச் சேர்ந்த தேவ் (28) மற்றும் கண்ணூரை சேர்ந்த முகம்மது ராபி (27) என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இருவரையும் அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று மடக்கிய போலீசார் அவர்களை கைது செய்தனர். கைதானவர்களில் ஸ்ரீதேவ் என்பவர் மலையாள சினிமாவில் இணை இயக்குனராக உள்ளார். முகம்மது ராபி மேக்கப் மேனாக பணிபுரிந்து வருகின்றார். விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வாலிபரிடம் ரூ.46 லட்சம் மோசடி: சினிமா இணை இயக்குனர், மேக்கப் மேன் கைது appeared first on Dinakaran.