பெங்களூரு: வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்து, இந்தியாவில் இருந்த அவரது சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. விஜய் மல்லையா வட்டியுடன் செலுத்த வேண்டிய கடன் தொகை ₹6,200 கோடி. ஆனால் அதைவிட பன்மடங்கு தொகையை தன்னிடமிருந்து பறித்துவிட்டதாகவும், தன்னிடமிருந்தும், யுபிஎச்எல் நிறுவனத்திடமிருந்தும் மீட்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு தொகை விவரங்களை பெற்றுத்தரக் கோரி விஜய் மல்லையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இந்த மனுவை விசாரித்தார். விஜய் மல்லையா சார்பில் மூத்த வழக்கறிஞர் சஜன் பூவையா ஆஜரானார்.
வழக்கு விசாரணையின்போது விஜய் மல்லையா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சஜன் பூவையா, முதன்மை கடனாளி கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் உத்தரவாதம் அளித்த யுபிஎச்எல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட வேண்டிய கடன் தொகை ₹6,200 கோடி என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. ஆனால், 2017ம் ஆண்டிலிருந்து இப்போது வரை ₹6,200 கோடி மட்டுமல்லாது அதுபோன்று பன்மடங்கு அதிகமான தொகை மீட்கப்பட்டிருக்கிறது. இப்போது வரைக்கும் விஜய் மல்லையாவிடமிருந்து ₹10,200 கோடி மீட்கப்பட்டிருக்கிறது என்று கடன் மீட்பு அதிகாரியே தெரிவித்திருக்கிறார். விஜய் மல்லையாவின் கடன் தொகை ₹14,000 கோடி மீட்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், கடன் மொத்தமாக செலுத்தப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், முதன்மைக் கடன் முழுவதுமாகச் செலுத்தப்பட்டுவிட்டதா என்பது பற்றிய தெளிவு இல்லாமலேயே மீட்புகள் தொடர்கின்றன. எனவே மனுதாரரிடமிருந்து (விஜய் மல்லையா) இதுவரை மீட்கப்பட்ட மொத்த கடன் தொகை விவரங்களை தெரிவிக்க உத்தரவிடக்கோரி வாதிட்டார். மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மனுதாரரிடமிருந்து மீட்கப்பட்ட மொத்த கடன் தொகை மதிப்பு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post விஜய் மல்லையாவிடம் மீட்கப்பட்ட மொத்த பணம் எவ்வளவு?.. விவரம் தெரிவிக்க வங்கிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.