*5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
சித்தூர் : சித்தூரில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில்.
இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இதனால் வரசித்தி விநாயகர் கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வழக்கத்தை விட காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையொட்டி காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர், குடிநீர் உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததால் கோயில் பார்க்கிங் முழுவதும் நிரம்பி சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதனால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரே நாளில் 21 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 794 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில், 531 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 2 ஆயிரத்து 528 பக்தர்கள் அன்ன பிரசாதம் அருந்தினர்.
அதேபோல் கோயிலுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 511ஐ பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். கோயில் தரிசன டிக்கெட் கட்டணம் மூலம் கோயிலுக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 400 வருமானம் கிடைத்தது. அன்னதானத்திற்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 905ம், கோ அறக்கட்டைகளைக்கு ரூ.88 ஆயிரத்து 603ம் பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்.
The post விடுமுறை தினத்தையொட்டி திரண்டனர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் அலைமோதல் appeared first on Dinakaran.