கோவை: விண்ணில் இரு செயற்கை கோள்கள் இணைப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ குழுவில் இடம்பெற்ற கோவை விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். இஸ்ரோ, தனது சாதனை திட்டங்களில் ஒன்றான, விண்வெளியில் இரு செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியை கையில் எடுத்தது. ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. கடந்த வாரமே இரு செயற்கை கோள்களை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் அது தாமதம் ஆனது.
இதற்கிடையே, விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் செயல்முறை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கை கோள்களை இணைக்கும் பரிசோதனை கடந்த ஜனவரி 16ம்தேதி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனை திட்டக்குழுவில் கோவையை சேர்ந்த விஞ்ஞானி பிரபு (40) இடம் பெற்றுள்ளார். இவர், கோவை மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர். இத்திட்டத்தின் துணை இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை சின்னராஜ். சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தார். தற்போது, ஓய்வில் உள்ளார். தாயார் பெயர் குமுதம். இத்தம்பதியருக்கு, விஞ்ஞானி பிரபு ஒரே மகன். இவர், கோவை சங்கனூர் எல்சி பள்ளியில் மேல்நிலை வகுப்பு படித்தார். பின்னர், சென்னையில் இன்ஜினியரிங் படித்தார். அதன்பின், சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக எம்.இ., மேற்படிப்பு படித்தார். அதன்பின்னர், இஸ்ரோவில் கடந்த 2011ம் ஆண்டு விண்வெளி விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.
இந்த சாதனை குறித்து விஞ்ஞானி பிரபு `தினகரன்’ நிருபரிடம் கூறியதாவது: எனது மனைவி மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறேன். பெற்றோர் கோவையில் உள்ளனர். இஸ்ரோவில் கடந்த 14 ஆண்டாக பணி புரிகிறேன். இஸ்ரோவில் நிறைய துணை திட்ட இயக்குநர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். குறிப்பாக, விண்வெளியில் செயற்கை கோள் இணைப்பு திட்டத்தில் துணை இயக்குநராக பணியாற்றியது பெரும் மகிழ்ச்சி.
இந்த வெற்றி மூலம் 14 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நமது பணியை திறம்பட செய்தால், நிச்சயம் ஒருநாள் வெற்றி வசப்படும். அதற்கு இத்திட்டம் மிகப்பெரிய உதாரணம். இத்திட்டத்தின் வெற்றி, இஸ்ரோவின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, 2035ல் இந்தியா சார்பில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் திட்டம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம், சந்திரயான்-4 திட்டம் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இஸ்ரோவின் அடுத்தடுத்த வெற்றிக்கு, இது முதல் படியாக அமைந்துள்ளது. இவ்வாறு விஞ்ஞானி பிரபு கூறினார்.
The post விண்ணில் இரு செயற்கை கோள்கள் இணைப்பு; விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும்: இஸ்ரோ குழுவில் இடம்பெற்ற கோவை விஞ்ஞானி பேட்டி appeared first on Dinakaran.