புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் புறப்பட்டு 22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய வரலாற்று சாதனை படைத்தார் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா. அவருக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாசா மற்றும் இஸ்ரோ ஆதரவுடன் அமெரிக்காவின் ஆக்சியம் நிறுவனம் வணிக விண்வெளி பயணமாக ஆக்சியம்-4 திட்டத்தை உருவாக்கியது.
இதில் இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை கேப்டனுமான சுபான்சு சுக்லா விண்கலத்தின் பைலட்டாகவும், முன்னாள் நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன் கேப்டனாகவும், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னாஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் திட்ட நிபுணர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவினர் கடந்த மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர்.
24 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26ம் தேதி டிராகன் கிரேஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அங்கு, சுபான்சு குழுவினர் 18 நாட்கள் தங்கியிருந்து 60 ஆய்வுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெளிநடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆக்சியம்-4ன் ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சுபான்சு குழுவினர் பூமிக்கு திரும்புவதற்காக, அவர்கள் சென்ற அதே டிராகன் கிரேஸ் விண்கலம் மூலம் புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் விண்வெளியில் மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. சுமார் 22.5 மணி நேரம் பயணம் செய்த விண்கலம் நேற்று மாலை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் மிக அபாயகரமான இக்கட்டத்தில் விண்கலம் 1,900 டிகிரி வெப்பத்தை தாங்கி வெற்றிகரமாக அசுர வேகத்தில் பூமியை நோக்கி தரையிறங்கத் தொடங்கியது.
இதில் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, திட்டமிட்டபடி சரியாக மாலை 3.01 மணிக்கு (இந்திய நேரப்படி) கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பசிபிக் கடலில் பாராசூட்கள் உதவியுடன் விண்கலம் தரையிறங்கியது. உடனடியாக மீட்புக் கப்பலான ஷானன் மூலம் விண்கலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் விண்கலத்தில் இருந்து சுபான்சு குழுவினர் புன்னகையுடன் வெளியே வந்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
3 வாரம் விண்வெளியில் இருந்ததால் புவியீர்ப்பு விசைக்கு உடல் ஒத்துழைக்காது என்பதால் சுபான்சு உட்பட 4 வீரர்களும் மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் ஒருவாரம் மருத்துவ பயிற்சிகளுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள். இந்த வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தின் மூலம் விண்வெளி நாயகனாக சுபான்சு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பிய முதல் இந்திய விண்வெளி வீரர் என்கிற சாதனைகளை சுபான்சு சுக்லா படைத்தார். அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுபான்சு சுக்லாவுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் முதல் முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்வான வீரர்களில் சுபான்சுவும் ஒருவர். இதனால், ஆக்சியம்-4 விண்வெளி பயணம் மூலம் இந்தியாவின் எதிர்கால விண்வெளி அத்தியாயத்தையும் சுபான்சு சுக்லா தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* பெற்றோர் ஆனந்த கண்ணீர்
38 வயதான சுபான்சு சுக்லா, உபி மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். அவர் பூமிக்கு திரும்பும் நிகழ்வை நேரலையில் பார்த்த லக்னோ மக்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷங்களுடன் பலத்த கைதட்டல்களுன் வரவேற்று மகிழ்ந்தனர். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக கடலில் இறங்கியதும், சுக்லாவின் குடும்பத்தினர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் பெருமிதம் அடைந்தனர்.
சுக்லாவின் தந்தை தயாள் சுக்லா மற்றும் தாய் ஆஷா தேவி ஆகியோர் தேசியக் கொடியை அசைத்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்த தேசத்திற்கு இது மகிழ்ச்சியான நாள். சுக்லா எங்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவர் சாதிக்க நினைத்தது இன்று நடந்து விட்டது. சுபான்சு சுக்லாவுக்காக பிரார்த்தனை செய்த ஒட்டுமொத்த தேசத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்றார்.
* ஆகஸ்ட் 17ம் தேதி இந்தியா வருகிறார்
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பூமிக்கு திரும்பிய சுபான்சு சுக்லா சில செயல்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மருத்துவ பயிற்சிகளுக்குப் பிறகு விண்வெளி பயணம் குறித்த விளக்கமளித்தல், இஸ்ரோ குழுவினருடன் ஆலோசனை போன்ற நிகழ்வுகள் உள்ளன. அவற்றை முடித்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி சுபான்சு சுக்லா இந்தியா வருவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
* சுபான்சு செய்த ஆய்வுகள் என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்சு சுக்லா 7 மைக்ரோகிராவிட்டி சோதனைகளையும் பிற திட்டமிடப்பட்ட செயல்பாடுகளையும் வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய வகை டார்டிகிரேடுகள் நுண்ணுயிரி சோதனை, எடையற்ற நிலையில் தசை செல்களின் செயல்பாடுகள் குறித்த மயோஜெனிசிஸ் சோதனை, விண்வெளியில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்கள், கதிர்வீச்சு விளைவுகள் மற்றும் மனித உடலியல் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
விண்வெளியில் வளர்க்கப்பட்ட பயிர் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டு அவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இது எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகளை விண்வெளியிலேயே வளர்ப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளாகும்.
* பில்லியன் கனவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், ‘‘விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபான்சு சுக்லாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது பங்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கும் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’’ என்றார். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘குரூப் கேப்டன் சுபான்சு சுக்லாவை வரவேற்பதில் நாட்டு மக்களுடன் நானும் இணைகிறேன். இந்தியாவின் சொந்த மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்கு இது மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. சுபான்சு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம், கோடிக்கணக்கானோரின் கனவுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது’’ என்றார்.
The post விண்வெளி நாயகனாக வரலாற்று சாதனை படைத்து பூமிக்கு திரும்பினார் சுபான்சு சுக்லா: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து appeared first on Dinakaran.