டெல்லி: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் 8 நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 9 மாதங்களாக நீடித்தது. இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்கள் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 3.27 மணிக்கு ஃபுளோரிடா கடலில் டிராகன் விண்கலம் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;
நாசா விண்வெளி வீரர்களை பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர்கள் தங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதியால் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரலாற்றுப் பயணம் உறுதிப்பாடு, குழுப்பணி மற்றும் அசாதாரண தைரியத்தின் உதாரணமாகும். அவர்களின் அசைக்க முடியாத உறுதியை வணங்குகிறேன். அவர்களுக்கு சிறந்த ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் குழுவினர் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளனர். விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்த கனவுகளை நிஜமாக மாற்றும் தைரியத்தைக் கொண்டிருப்பதாகும்.
இந்த உணர்வை சுனிதா வில்லியம்ஸ் தனது வாழ்க்கை முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். துல்லியத்துடன் ஆர்வமும், தொழில்நுட்பத்துடன் விடாமுயற்சியும் இணையும்போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.