புதுடெல்லி: விமர்சனங்கள்தான் ஜனநாயகத்தின் ஆன்மா. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார். அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், செயற்கை நுண்ணுயிர் ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் பிரிட்மேனுக்கு பிரதமர் மோடி அளித்த பாட்காஸ்ட் பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியர்கள் சண்டையை எப்போதுமே விரும்புவதில்லை. நாங்கள் நல்லிணக்கத்தையே விரும்புகிறோம். நாடுகளுக்கு எதிரான போரையும் நாங்கள் விரும்பவில்லை. சீனாவுடனான போட்டி மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை களைய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 2020ல் நடந்த மோதலுக்கு முன் இருந்த நிலைமைக்கு எல்லைகள் திரும்பி வருகின்றன.
இருநாடுகளுக்கிடையேயான உறவில் 5 ஆண்டுகள் இடைவெளி விழுந்து விட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட வேண்டும். இந்தியா சீனா இடையேயான ஒத்துழைப்பு அதிகரிப்பது உலகத்துக்கே நல்லது. ரஷ்யா, உக்ரைன் போரில் இந்தியா யார் பக்கமும் இல்லை. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் இருக்கும். இரு நாடுகளும் ஒன்றாக அமர்ந்து பேசினால் போர் முடிவுக்கு வரும். உலக தலைவர்களுடன் நான் கைக்குலுக்கும்போது, அவர்களுடன் உண்மையில் கைக்குலுக்குவது நான் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்கள். இது என்னுடைய பலம் அல்ல. இது இந்திய நாட்டின் பலம். 140 கோடி இந்தியர்களின் ஆதரவும், இந்திய கலாச்சாரமும்தான் என் பலம். இந்தியா என்பது புத்தரின் பூமி, மகாத்மா காந்தியின் மண்.
எங்கெல்லாம் சமாதானமாக போகமுடியுமோ அங்கெல்லாம் நாங்கள் அந்த பொறுப்பை செய்கிறோம். என்னை குறை சொல்கிறார்கள். நான் விமர்சனங்களை வரவேற்கிறேன். விமர்சனம்தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று நம்புகிறேன். பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு நம்பிக்கை துரோகமும், விரோதமும்தான் பதிலாக கிடைத்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் அமைதியின் பாதையை தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன். கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் என்னை தொடர்புப்படுத்த ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி முயன்றது.
ஆனால், நீதிமன்றங்கள் எனக்கும் அந்த கலவரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவுப்படுத்திவிட்டன. ஆர்.எஸ்.எஸ் போன்ற பெரிய சேவை அமைப்பை நான் பார்த்ததில்லை. அந்த அமைப்பில் இளம் வயதிலேயே சேர்ந்து விட்டேன். எதற்காக நான் பிறந்தேன் என்பதை எனக்கு உணர வைத்தது ஆர்.எஸ்.எஸ்தான். நான் இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இரவு என்பது எவ்வளவு இருட்டாக இருந்தாலும் சரி, இது இன்னும் இரவுதான் என்று நினையுஙகள், விடியல் வந்தே தீரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
* வறுமையில் கழிந்த சிறுவயது
பிரதமர் மோடி கூறுகையில், ‘‘எனது சிறு வயது மிகவும் வறுமையில் கழிந்தது. நல்ல ஷூ அணிந்து பழகிய ஒருவர், அவை இல்லாத பட்சத்தில் அதன் அருமையை உணர்வார். ஆனால் எங்களை பொறுத்தவரை, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஷூ அணிந்ததே இல்லை. எனவே, ஷூ அணியாமல் இருப்பது எங்களுக்கு ஒரு சிரமமே இல்லை. ஒரு நாள் செருப்பு கூட அணியாமல் நான் பள்ளிக்கு சென்றதை பார்த்த என் உறவினர், உடனடியாக ரூ.12 செலவு செய்து வெள்ளை நிற கான்வாஸ் ஷூ வாங்கித் தந்தார். ஆனால், அந்த ஷூவை வெள்ளை நிறத்தில் வைத்திருப்பது பெரும் சவாலாகிபோனது. மாலையில், பள்ளி முடிந்ததும், வகுப்பறைகளில் கீழே சிதறி கிடக்கும் சாக்பீஸ் துண்டுகளை சேகரித்து தண்ணீர் ஊற வைத்து அதை பிசைந்து ஷூவில் தேய்த்து பாலிஷ் செய்வேன்’’ என்றார்.
The post விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்: பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.