ஜோத்பூர்: ராஜஸ்தானில் இருந்து கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவை திறக்க முயற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து நேற்று காலை இண்டிகோ விமானம் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறினர். விமான குழுவினர், விமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர். ஆனால் திடீரென ஒரு பயணி, அவசரகால வெளியேறும் கதவைத் திறந்தார். இவரது செயலால் விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுட்டது.
விமானிகள் மற்றும் விமானக் குழுவினர் நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொள்ள தொடங்கினர். குறிப்பிட்ட அந்த பயணி கைது செய்யப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் (சிஐஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அவசரகால கதவை திறந்த பயணியின் பெயர் சிராஜ் கித்வாய். அவர் தான் தற்செயலாக அவசரகால கதவை திறந்ததாக கூறினார். அவசரகால கதவு திறக்கப்பட்டதும், விமானிக்கு நேரடிச் செய்தி அனுப்பப்பட்டது. பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்’ என்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ விமான நிறுவனம், ‘விமானத்தில் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் எங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள விமான நிலைய காவல் நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 20 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் பரபரப்பு காணப்பட்டது.
The post விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பயணியால் பீதி: ராஜஸ்தானில் தாமதமாக புறப்பட்ட விமானம் appeared first on Dinakaran.