விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட காரண ங்களால் விபத்து நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் விருதுநகர் அருகே வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 84 அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.