*குறைந்த விலையில் வாங்கி பயன் பெறலாம்
*அமைச்சர் பொன்முடி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்
விழுப்புரம் : தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை சார்பில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் அருகே சாலை அகரத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாார். ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இதன் மற்றொரு வரலாற்று சிறப்பு நிகழ்ச்சியாக, அனைவருக்கும் குறைந்த விலையில் பொதுப்பெயர் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், 15.8.2024 அன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.
அதனடிப்படையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் ஊராட்சியில், கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் விழுப்புரம் மாவட்டத்தில் 22 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 1 தொழில் முனைவோர் என மொத்தம் 23 முதல்வர் மருந்தகங்கள் அமைத்திட ஒப்புதல் பெறப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி மூலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சாலை அகரம், கண்டமங்கலம், மேல்வைலாமூர், விழுக்கம், சித்தலிங்கமடம், அரகண்டநல்லூர், இரும்பை, மரக்காணம், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, விக்கிரவாண்டி, கோணை, அன்னியூர், காணை, சாத்தாம்பா, ஆவணிப்பூர், வளவனூர், நேமூர், கண்டாச்சிபுரம், கெடார், ஜி.செம்மேடு, ஆலங்குப்பம், செஞ்சி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக முதல்வர் மருந்தகங்களும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில், தொழில் முனைவோர் திவ்யா சின்னகிருஷ்ணன் வாயிலாக முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1.50 லட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது.
மேலும் ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியம் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1 லட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1 லட்சம் மதிப்புக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சச்சிதாநந்தம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவிசேரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் விஜயசக்தி, துணை பதிவாளர் சிவபழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது appeared first on Dinakaran.