திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் `எக்ஸிட்டோ சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் கால்சென்டர் தொடங்கப்பட்டது. இதில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். இந்த கால்சென்டர் மூலம் அமெரிக்க குடிமக்கள், என்.ஆர்.ஐக்கள் உள்ளிட்டோரின் பண பரிவர்த்தனை டேட்டாக்களை ரகசியமாக சேகரித்தனர். இதனை துபாயில் இருந்தபடி ஆசாத் என்பவர் வெளிநாட்டினரின் டேட்டாக்களை சேகரித்து அவற்றை ஐதரபாத் கால்சென்டருக்கு அனுப்பி வைப்பார்.
அவற்றின் பெயரில் சம்பந்தப்பட்ட என்ஆர்ஐ மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு இ-மெயில் அனுப்புவார்கள். அதில், `நீங்கள் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டவிரோதமாகவும் பணம் பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். எனவே அவற்றை நீங்கள் அபராத தொகையுடன் செலுத்தவேண்டும்’ எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை நம்பி பலர் இந்திய ரூபாயின் மதிப்பில் பல கோடி ரூபாய் இழந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இதுபோன்ற மோசடி நடந்தது அம்பலமானது. இதில் மூளையாக செயல்பட்ட நபர் குஜராத்தை சேர்ந்த கைவன் படேல் என்பதும் இவருக்கு உடந்தையாக இருந்தது அவரது சகோதரர் விக்கி, துபாயை சேர்ந்த ஆசாத் ஆகியோர் என்பதும் தெரிந்தது. முதற்கட்டமாக ஐதராபாத்தில் இயங்கி வந்த கால்சென்டரை போலீசார் கண்டறிந்தனர். நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்த அவர்கள் அங்கிருந்த 22 பெண்கள் மற்றும் 41 ஆண்கள் என மொத்தம் 63 பேரை கைது செய்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
The post வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இ-மெயில் அனுப்பி பல கோடி ரூபாய் மோசடி: ஐதராபாத் கால்சென்டரில் ரெய்டு; 22 பெண்கள் உள்பட 63 பேர் கைது appeared first on Dinakaran.