பெங்களூரு: வெள்ளைத்தாளில் கையெழுத்து போடச்சொல்லி வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் என்னை 15 முறை கன்னத்தில் அறைந்து அடித்து துன்புறுத்தினர் என்று டிஆர்ஐ இயக்குநரக ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம் எழுதியுள்ளார். துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்து, பெங்களூருவில் கைதான நடிகை ரன்யா ராவ், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மற்றும் சிபிஐ விசாரித்துவரும் நிலையில், அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரிக்கிறது. ரன்யா ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ரன்யா ராவ், டிஆர்ஐ ஏடிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார். ரன்யா ராவ் எழுதிய அந்த கடிதத்தில், ‘என் மீது பொய்யான வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் ஒரு அப்பாவி என்ற என் பக்க நியாயத்தை தெரிவிக்க உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவே இல்லை. சம்பவம் குறித்து விவரிக்க அனுமதிக்கவில்லை. நான் துபாயிலிருந்து 14 கிலோ தங்கத்தை கடத்திவந்ததாக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவர்கள் தயார் செய்த 50-60 பேப்பர்கள் மற்றும் 40 வெற்றுக் காகிதங்களில் என்னை கையெழுத்திட கட்டாயப்படுத்தி அடித்து துன்புறுத்தினர். என்னை கன்னத்தில் 15 முறை அறைந்து கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். ஆனால் மறுத்துவிட்டேன். அதில் ஒரு அதிகாரி, நான் அதில் கையெழுத்திடவில்லை என்றால், என் அப்பாவிற்கு இதில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், அவரையும் இதில் இழுத்துவிடுவேன் என்று மிரட்டினார். இவ்வாறு கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
* கட்டாய விடுமுறையில் செல்ல ஏடிஜிபிக்கு அரசு உத்தரவு
ரன்யா ராவின் வளர்ப்புத்தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக மாநில காவல் துறை குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ள நிலையில், ஏடிஜிபி-யான அவரது செல்வாக்கை ரன்யா ராவ் தங்கம் கடத்த பயன்படுத்தியிருப்பதால் அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. ஏடிஜிபி ராமச்சந்திர ராவை கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா விசாரித்துவருகிறார். ஏடிஜிபியான ராமச்சந்திர ராவிற்கு கூடுதலாக வழங்கப்பட்ட அரசு வாகனத்தில் தான் ரன்யா ராவ் தங்கத்தை பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கட்டாய விடுமுறையில் செல்ல கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
The post வெள்ளை தாளில் கையெழுத்து போடச்சொல்லி என்னை 15 முறை கன்னத்தில் அறைந்தனர்: டிஆர்ஐ ஏடிஜிபிக்கு நடிகை ரன்யா ராவ் கடிதம் appeared first on Dinakaran.