பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியை அடுத்த ஆமயூர் சாலையில் வசிப்பவர் ஷர்ஷா சினிவர். இவரது மகள் ஷைமா (18), பிளஸ் 2 முடித்துவிட்டு அரசு பணிக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார். இந்நிலையில், இவருக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயதுடைய வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதையறிந்த பெற்றோர், ஷைமாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனால், மனமுடைந்த ஷைமா, நேற்று அவரது சித்தப்பா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று ஷைமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காதலி உயிரிழந்த தகவலை அறிந்ததும் விரக்தியில் காதலன், கை நரம்பை துண்டித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஷைமா, அவரது காதலனை திருமணம் செய்யவிருந்த நிலையில் அவரது பெற்றோர் வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்ததால் மனமுடைந்த ஷைமா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்ததால் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கை நரம்பை அறுத்து காதலன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.