மும்பை: குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாது என மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, எம்.எல்.ஏ.க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜகவில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். மேலும் அவர், சிவசேனா உருவாக பாஜகதான் காரணம். சிவசேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்றும் குணால் கம்ரா குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அரசியல் நகைச்சுவை வீடியோவை அடுத்து, சிவசேனா இளைஞரணியினர், அவர் தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதற்கு பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்; ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்க முயன்ற விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். 2024 தேர்தலில் மகாராஷ்டிரா மக்கள் கத்தார் யார், குத்தார் யார் என்பதை முடிவு செய்துவிட்டனர். நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. குணால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார்.
The post ஷிண்டே குறித்து விமர்சனம்.. குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்; அவர் பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாது: தேவேந்திர ஃபட்னாவிஸ் பேட்டி! appeared first on Dinakaran.