புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக மற்றும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது: பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் ஸ்டாலினும் என்மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர். நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 15 தேதியிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஒப்புதல் தெரிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவிப்பது ஏன்?