புதுடெல்லி: உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு இடம் இல்லை. அதே சமயம் ரோஷினி நாடார் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்தார். உலக பணக்காரர்கள் பட்டியலை ஹூரூண் குளோபல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தை அமெரிக்க தொழில் அதிபர் எலான்மஸ்க் பிடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை அவர் தக்க வைத்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு தற்போது 82 சதவீதம் அதிகரித்து ரூ.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 44 சதவீதம் அதிகரித்து, ரூ. 22 லட்சம் கோடியாக உள்ளது. மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் முதல் முறையாக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறி உள்ளார். அவருடைய சொத்து ரூ.7 லட்சம் கோடி அதிகரித்து, தற்போது ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஆரக்கிளின் லாரி எலிசன் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்தார். அவருடைய சொத்து ரூ.17 லட்சம் கோடியாக இருந்தது. வாரன் பப்பெட் முதல் ஐந்து இடங்களுக்குள் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார், அவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.14.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 6வது இடம் கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ்ஜிற்கு கிடைத்தது. அவரது சொத்து மதிப்பு ரூ.14 லட்சம் கோடி, 7வது இடம் பிடித்த பிரெஞ்சு கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு ரூ.13.4 லட்சம் கோடி, மைக்ரோசாப்டின் முன்னாள் சிஇஓ ஸ்டீவ் பால்மர் ரூ.13.3 லட்சம் கோடி சொத்துக்களுடன் 8வது இடத்திலும், செர்ஜி பிரின் ரூ.12.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9வது இடத்திலும், பில்கேட்ஸ் ரூ.12.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 10வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் யாருக்கும் இடம் இல்லை. அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது 18வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி குறைந்தது, ரூ.8.6 லட்சம் கோடியாக மாறியது. இருப்பினும் இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் அம்பானி தான் இடம் பிடித்துள்ளார். அதே சமயம் அதானி 2025ம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி புதிய சொத்து மதிப்புடன் ரூ.8.4 லட்சம் கோடியுடன் உலக பணக்காரர் பட்டியலில் 27வது இடத்தையும் பிடித்துள்ளார்.
எச்சிஎல் நிறுவன தலைவரான ரோஷினி நாடார், உலகின் ஐந்தாவது பணக்கார பெண்மணியாகவும், உலகின் முதல் 10 பணக்கார பெண்களில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாகவும் உயர்ந்துள்ளார். அவரது தந்தை ஷிவ் நாடார் எச்சிஎல் பங்குகளில் 47% அவருக்கு மாற்றிய பிறகு அவரது நிகர மதிப்பு ரூ. 3.5 லட்சம் கோடியாக மாறி உள்ளது. இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் இளையவர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 22 இந்திய பெண்கள் மொத்தம் ரூ.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.40,000 கோடிக்கு மேல் உள்ளது. பெண் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் முதல் மூன்று நாடுகளில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளன.
* இந்தியாவுக்கு 3வது இடம்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உலகம் முழுவதும் 3,442 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 13 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். நாட்டில் மொத்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 284 ஆக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவர்களது மொத்த ரூ. 98 லட்சம் கோடி ஆகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
* இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள்
* முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம் ரூ.8.6 லட்சம் கோடி (-13%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மும்பை)
* கவுதம் அதானி மற்றும் குடும்பம் ரூ.8.4 லட்சம் கோடி (+13%, அதானி குழுமம், அகமதாபாத்)
* ரோஷினி நாடார் மற்றும் குடும்பம் ரூ.3.5 லட்சம் கோடி (புதிய இடம், எச்.சி.எல், புதுடெல்லி)
* திலீப் ஷங்வி மற்றும் குடும்பம் ரூ.2.5 லட்சம் கோடி (+21சதவீதம், சன் பார்மா, மும்பை)
* அசிம் பிரேம்ஜி மற்றும் குடும்பம் ரூ.2.2 லட்சம் கோடி (மறுமதிப்பீடு, விப்ரோ, பெங்களூரு)
* குமாரமங்கலம் பிர்லா மற்றும் குடும்பம் ரூ.2 லட்சம் கோடி (+28 சதவீதம், ஆதித்யா பிர்லா குழுமம், மும்பை)
* சைரஸ் எஸ். பூனவல்லா மற்றும் குடும்பம் ரூ.2 லட்சம் கோடி (-8 சதவீதம், சீரம் இன்ஸ்டிடியூட், புனே)
* நிராஜ் பஜாஜ் மற்றும் குடும்பம் ரூ.1.6 லட்சம் கோடி (+12 சதவீதம், பஜாஜ் ஆட்டோ, மும்பை)
* ரவி ஜெய்பூரியா மற்றும் குடும்பம் ரூ.1.4 லட்சம் கோடி (+7 சதவீதம், ஆர்ஜே கார்ப், புதுடெல்லி)
* ராதாகிஷன் தமானி மற்றும் குடும்பம் ரூ.1.4 லட்சம் கோடி (-11%, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், மும்பை)
* முதல் 5 பெண் கோடீஸ்வரர்கள்
* ஆலிஸ் வால்டன் (வால்மார்ட், அமெரிக்கா) ரூ.8.7லட்சம் கோடி
* பிராங்கோயிஸ் பெட்டர்கோட் மேயர்ஸ் (லோரியல், பிரான்ஸ்) ரூ.5.7 லட்சம் கோடி
* ஜூலியா கோச் (கோச் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கா) ரூ.5.1 லட்சம் கோடி
* ஜாக்குலின் மார்ஸ் (மார்ஸ், அமெரிக்கா) ரூ.4.54 லட்சம் கோடி
* ரோஷினி நாடார் (எச்.சி.எல், இந்தியா) ரூ.3.50லட்சம் கோடி
The post 10 உலகின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி 18வது இடம் அதானிக்கு 27வது இடம் appeared first on Dinakaran.