டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காததால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஒதுக்கீட்டை குறைந்த ஒன்றிய அரசு தற்போது திட்டத்தையே முடக்க முயற்சிப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஐ.மு.கூட்டணி ஆட்சியின் போது கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக திகழும் இந்த திட்டத்துக்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு படிப்படியாக குறைத்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.86,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு தேவையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படாமல் உள்ளது அதுமட்டுமின்றி ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கான ஊதிய நிலுவை தொகையாக ரூ.4,315 கோடியை ஒன்றிய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வழங்காததால் பல மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கான ஊதியம் வார இறுதியிலோ அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்கு உள்ளாகவோ வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்காததால் கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.1056 கோடி நிலுவை தொகையை உடனடியாக விடுக்கக்கோரி கடந்த 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதி இருந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஊதியம் மட்டுமல்லாது வேலை உறுதி திட்டத்துக்கான மூலப்பொருட்கள் வாங்குவதற்கான நிதியில் 60 சதா வீதத்தை ஒன்றிய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் ஒதுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு மூலப்பொருட்களுக்கான நிதியை வழங்குவதில் தாமதம் செய்வதால் வேலை திட்டம் முடங்கும் சூழல் உருவாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது படிப்படியாக குறைக்கப்படுவதாக 2024 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post 100 நாள் வேலை திட்டம் ; ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காததால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்..!! appeared first on Dinakaran.