டெல்லி : 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார். 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் கிராமப்புற இந்தியாவுக்கான ஒரு முக்கிய ஊதிய வேலை வாய்ப்பு திட்டமானது என்றும் இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுவது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி ஆகியோர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவை தொகையான ரூ.1,635 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் வரி பகிர்வுகளை தாமதம் இன்றி விடுவிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மனு!! appeared first on Dinakaran.