டெல்லி: தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது;
இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்ட நிதி நிலுவைத் தொகையாக ரூ.4,034 கோடியை வழங்குவதில் ஒன்றிய அரசு தாமதம் செய்வது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். நான்கரை மாதங்களுக்கும் மேலாக, இந்த நியாயமற்ற தாமதத்தால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86% பெண்கள், 29% எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர், 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அவர்களின் நியாயமான ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது, ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை முறையீடுகள் செய்த போதிலும், ஒன்றிய அரசு தொடர்ந்து நிதியை நிறுத்தி வைத்துள்ளது. எனவே, ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post 100 நாள் வேலை திட்ட நிதி தாமதம்.. ரூ.4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.