சென்னை: தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29-ம் தேதி திமுக சார்பில், அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த மார்ச் 9ம் தேதி அன்று , சென்னையில் நடைபெற்ற திமுக எம்.பிகள் கூட்டத்தில், பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும். அத்துடன் மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.