புதுடெல்லி: 11 சிலை கடத்தல் எப்ஐஆர் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘இந்த வழக்கு விவகாரத்தில் இரண்டாவதாக ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். அதில் தான் சந்தேகம் எழுகிறது’ என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘சிலை திருட்டு வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், இரண்டாவது எப்.ஐ.ஆர் பதியப்பட்டு உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மனுதாரர் கூறியது போன்று 41 எப்.ஐ.ஆர்கள் காணாமல் போகவில்லை. 11 எப்.ஐ.ஆர் தான் காணாமல் போயிருக்கிறது. அவற்றில் இருக்கும் விஷயங்களையும் மீண்டும் தயார் செய்து விட்டோம். மேலும் இந்த சிலை கடத்தல் பிரிவில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் பெற்று சென்றுள்ளனர்.
இதில் இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை’ என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சிலை கடத்தல் கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்கையும் ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை வேண்டும். அவரை இன்றில் (நேற்று) இருந்து ஒரு வார காலத்திற்குள் மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும். அவர் வழக்கு தொடர்பான விசாரணையை விரிவாக மேற்கொண்டு மார்ச் இறுதிக்குள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றமும் கண்கானித்து வரும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post 11 சிலை கடத்தல் எப்ஐஆர் மாயமான விவகாரம்: மூத்த ஐபிஎஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை.! உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.