புதுடெல்லி: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரேகா குப்தா, டெல்லியின் புதிய முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு ரேகா குப்தா புதிய முதல்வராக பதவியேற்கிறார். டெல்லியில் முன்னாள் முதல்வர் அடிசி தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 5ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜ வெற்றிபெற்றது. இதையடுத்து, 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அந்த கட்சி ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தையும் பிடிக்காமல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 12 நாட்கள் ஆன நிலையிலும் அந்த கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் கூட நடைபெறவில்லை. இதனால் முதல்வர் தேர்வில் இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே 19ம் தேதி பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல், 20ம் தேதி முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ராம் லீலா மைதானத்தில் அதற்கான பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில்புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜ தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை மேலிட பார்வையாளராக நியமனம் செய்து நேற்று பிற்பகல் பா.ஜ தேசிய தலைமை உத்தரவிட்டது. பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. அதில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட 48 எம்எல்ஏக்களும், மேலிட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய பிறகு புதிய முதல்வர் குறித்து அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, முதல்வர் போட்டியில் பாஜவின் முன்னணி தலைவர்களான எம்பி.க்கள் பன்சூரி சுவராஜ், மனோஜ் திவாரி, கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய், மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் ரேகா குப்தா உள்ளிட்ட 14 பேர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இறுதியில் ரேகா குப்தா (50) முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை மேலிட பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து, பாஜ சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்துடன் ஆளுநர் சக்சேனாவை ரேகா குப்தா நேற்று இரவு சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு அவர் உரிமை கோரினார். அதை சக்சேனா ஏற்றுக் கொண்டதையடுத்து இன்று காலை 11 மணிக்கு புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்கிறார். துணை முதல்வராக பர்வேஷ் வர்மா தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. மேலும் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் பதவியேற்பு விழாவில், தேசிய கூட்டணி கட்சித் தலைவர்கள், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பொதுமக்கள், எம்பி.க்கள். எம்எல்ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் என 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
The post 12 நாள் இழுபறிக்கு பின்னர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம்: டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தா: இன்று காலை பதவி ஏற்பு விழா appeared first on Dinakaran.