பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. இதில் 35 கோடி பக்தர்களுக்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உபியின் பிரயாக்ராஜ், ஹரித்துவார், நாசிக் மற்றும் உஜ்ஜைனியில் உள்ள புனித நதிகளில் கும்பமேளா நடத்தப்படும். அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடத்தப்படும். இது உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக திகழ்கிறது. இந்நிலையில், மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளாவில் 35 கோடி பக்தர்கள், துறவிகள், அகாராக்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவை ஒட்டி ஏற்கனவே பலரும் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். எனவே இவ்விழாவுக்காக உபி அரசு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கி பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளது. 50 ஆயிரம் முதல் 1 கோடி மக்கள் தங்கும் வகையில் கூடாரங்களுடன் தற்காலிக நகரமே அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பலரும் வருவார்கள் என்பார்கள் சொகுசு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 45,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் புரளிகள் பரவாமல் தடுக்க சிறப்பு குழுவினர் முழுமையாக கண்காணித்து வருகின்றனர். டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் சென்று வர 30 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்குவதற்கு ஓட்டல்கள், விடுதிகளை தவிர மொத்தம் 1.5 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் மின் விளக்கு வசதிகள் செய்ய 4.5 லட்சம் புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவிர, நாடு முழுவதும் இருந்து மகா கும்பமேளாவில் மக்கள் கலந்து கொள்ள வசதியாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, கொல்கத்தா, ஜபல்பூர், டேராடூன் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜூக்கு சிறப்பு ரயில்கள், பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
The post 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது: உபி பிரயாக்ராஜில் பிரமாண்ட ஏற்பாடு appeared first on Dinakaran.