புதுடெல்லி: அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட காங்கிரஸ் தலைமையகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். நாட்டின் மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சி, தற்போது டெல்லியின் கோட்லா சாலையில் உள்ள 9 ஏ-வில் புதியதாக கட்சி தலைமை அலுவலகத்தை கட்டியுள்ளது. இந்த தலைமை அலுவலகத்திற்கு இந்திரா காந்தி பவன் என்று பெயரிட்டுள்ளது. வரும் 15ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு நடக்கும் பிரமாண்டமான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுநாள் வரை காங்கிரஸ் தலைமையகம் டெல்லியின் 24, அக்பர் சாலையில் இருந்தது. புதிய தலைமையகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் போன்ற தலைவர்களின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தின் சிறப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தலைமையகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 400 தலைவர்கள் பங்கேற்கும் கூட்ட அரங்கம் உள்ளது. இவ்விழாவில் காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 400 உயர்மட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையகம் ஆறு மாடி கட்டிடத்தில் இனிமேல் செயல்படும். கடந்த 2009ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியமைத்த பின்னர், அப்போது சோனியா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின், இந்த கட்டிடம் நாளை திறப்புவிழா காண்கிறது.
The post 15 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணி அதிநவீன வசதிகளுடன் காங்கிரஸ் தலைமையகம் நாளை மறுநாள் திறப்பு: சோனியா திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.