மும்பை : 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் 2006 ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர்; 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என கடந்த 2015ம் ஆண்டு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதில் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
அதில் 5 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அணில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தானி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில், “‘நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல. ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்து, 12 பேரையும் விடுதலை செய்கிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post 188 பேர் உயிரிழந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.