டெல்லி: டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் கடந்த பிப்.12ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
The post 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு.. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.