பூஜ்: “சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று குஜராத் சென்றார். அங்கு பூஜ் விமான படை தளத்துக்கு சென்ற ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்களிடையே உரையாற்றினார். அப்போது, “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. தற்போது முடிந்தது வெறும் முன்னோட்டம் (டிரெயிலர்) மட்டும்தான். தேவைப்பட்டால் மீண்டும் ஆபரேஷன் தொடரும். இந்திய விமானப்படை அதன் வீரம் மற்றும் மகிமையால் புதிய உயரத்தை தொட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுத படைகள் எதிரிகளை அழிப்பதில் முழு வெற்றி பெற்றது” என பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்), பாகிஸ்தானுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின்கீழ், 2வது தவணையாக ரூ.8,695 கோடி கடன் உதவி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதத்துக்கு தரும் நிதி உதவிக்கு சமம். இந்தியாவால் அழிக்கப்பட்ட தீவிரவாத உள்கட்டமைப்பை மீண்டும் கட்டி எழுப்ப பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என இவ்வாறு வலியுறுத்தினார்.
The post 2வது தவணையாக ரூ.8,695 கோடி நிதி உதவி பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வதை ஐஎம்எப் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் appeared first on Dinakaran.