புதுடெல்லி: நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் 2024-25ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் இருக்கும் கட்சிகளின் தரவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை அனைத்தும் அடங்கும். அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் 39 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளது. அதேப்போல் தமிழ்நாட்டில் 3 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், நமது உரிமை காக்கும் கட்சி. மக்கள் முரசு கட்சி ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் நமது உரிமை காக்கும் கட்சி தியாகராயநகர் முகவரியிலும், மக்கள் முரசு கட்சி கொடுங்கையூர் பகுதியில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று 2025 ஜனவரியில் 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளில் 50 சதவீத கட்சிகள் தேர்தலை சந்திக்காமல் வெறும் லெட்டர் பேடு கட்சிகளாக வலம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 86 கட்சிகளை நீக்கியும், 253 கட்சிகள் செயல்படாதவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்று தெரிவித்துள்ளது.
The post 2024-2025ம் ஆண்டில் நாடு முழுவதும் 60 புதிய கட்சிகள் தொடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.