அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைக்கு 2022ல் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் வெறும் 17 தொகுதிகளை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது. பா.ஜ வரலாறு காணாத வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் 2027ல் நடக்க உள்ளது. அதற்கு இரண்டரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் குஜராத் காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் பணியில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக 2 நாள் பயணமாக அவர் நேற்று குஜராத் சென்றார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று மட்டும் சுமார் 500 காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 64 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் ஏப்.8 மற்றும் 9ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ராகுல்காந்தி கட்சிநிர்வாகிகளை சந்தித்து, சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 1995ல் இருந்து வெற்றி பெற முடியாதது ஏன்?
மூத்த தலைவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது,’ 1995ல் இருந்து குஜராத்தில் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் மோடி அரசின் கீழ் பொருளாதார தோல்வி, வேலையின்மை, பணவீக்கம் மட்டுமே மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. இருப்பினும் காங்கிரஸிலிருந்து உயர் சாதியினர் ஏன் விலகி நிற்கிறார்கள்? கட்சிக்கு பதில்கள் தேவை ’ என்றார்.
The post 2027ல் சட்டப்பேரவை தேர்தல் குஜராத்தில் முன்கூட்டியே ராகுல்காந்தி ஆலோசனை: மூத்த நிர்வாகிகளுடன் சந்திப்பு appeared first on Dinakaran.