சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், அவர்கள் மேலிட பொறுப்பாளரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினர். அப்போது செல்வப்பெருந்தகை குறித்து ஆதாரங்களுடன் புகார்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் செல்வப்பெருந்தகை தற்போது உச்சகட்ட உட்கட்சி மோதலை எதிர் கொண்டு வருகிறார்.
கட்சி தொடர்பான எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தனிச்சையாகவே முடிவு எடுப்பதாகவும், கட்சி மூத்த தலைவர்களையோ, முக்கிய நிர்வாகிகளையோ அழைத்து கலந்தாலோசிப்பதில்லை எனவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு எதிராக 30க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 22 மாவட்ட தலைவர்கள், ஒரு எம்எல்ஏ என தமிழக காங்கிரஸ் பட்டாளமே டெல்லி புறப்பட்டு சென்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கரை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினர். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக மாற்றக் கோரி 4 பக்கம் கொண்ட மனு ஒன்றை மேலிட பொறுப்பாளரிடம் வழங்கியதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல இன்னும் 2 நாட்கள் டெல்லியில் முகாமிடவும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். இன்று காலை கே.சி.வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் நேரம் கேட்டுள்ளனர். அவர்களிடம் செல்வப்பெருந்தகையை மாற்ற கோரும் ேகாரிக்கையை முன் வைக்க உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி படையெடுத்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 22 மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாம் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி மேலிட பொறுப்பாளருடன் சந்திப்பு: கார்கே, ராகுல்காந்தியை சந்திக்கவும் திட்டம் appeared first on Dinakaran.