புதுடெல்லி: நாடு முழுவதும் 28 மாநிலங்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடியை வரிபகிர்வாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில் உபிக்கு ரூ.31 ஆயிரம் கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரியால் பெறப்படும் நிதியை ஒன்றிய அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் 2024 டிசம்பரில் ரூ.89,086 கோடி நிதியை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது. தற்போது மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் வசதியாக மாநில அரசுகளுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரிப் பகிர்வை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
இந்த பட்டியலில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.31 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ ஆளும் மத்தியபிரதேசத்திற்கு ரூ.13,582 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.10,930 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.10,426 கோடி, குஜராத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி, சட்டீஸ்கருக்கு ரூ. 5895 கோடி, அசாம் மாநிலத்திற்கு ரூ.5412 கோடி என்று வாரி வழங்கி உள்ளது. அதே போல் பா.ஜ கூட்டணி கட்சிகள் ஆளும் ஆந்திராவுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி, பீகாருக்கு ரூ.17,403 கோடி நிதியை அள்ளிக்கொடுத்துள்ளது ஒன்றிய அரசு. விதிவிலக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ.13,017 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
The post 28 மாநிலங்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரி பகிர்வு உபிக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடி: ஒன்றிய அரசின் பாரபட்சம் appeared first on Dinakaran.