டெய்ர் அல்-பலாஹ்: 3 இஸ்ரேலிய பெண் பணய கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்ததையடுத்து 15 மாதகாலமாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது. அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமானோரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக அக்டோபர் 8ம் தேதி முதல் ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் அப்பாவி பாலஸ்தீனர்கள் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – காசா போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை எடுத்து செல்லும் வாகனங்களையும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்கி வந்தது.
மேலும் காசாவில் பாலஸ்தீனர்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமலும், தங்க இடமின்றியும் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் படையினரை அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே கூறியிருந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாவதும் தொடர்கதையாக நீடித்து வந்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 16ம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒத்து கொண்டது. அதேபோல் காசா மீதான போரை நிறுத்த இஸ்ரேலும் ஒப்பு கொண்டது. 3 கட்டங்களாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் பிடித்து சென்ற 100 பணய கைதிகளில் 33 பணய கைதிகளை 6 வாரங்களில் விடுவிக்க ஹமாசும், இந்த 33 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,904 பாலஸ்தீனர் களை விடுவிக்க இஸ்ரேலும் ஒத்து கொண்டன.
இந்திய நேரப்படி நேற்று மதியம் 12 மணிக்கு(இஸ்ரேல் நேரப்படி காலை (8.30 மணி) போர் நிறுத்தம் அமலுக்கு வர இருந்தது. முதல்நாளான நேற்று ஹமாஸ் 3 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க, அதற்கு ஈடாக இஸ்ரேல் 90 பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள 3 பணய கைதிகளின் பெயர்களையும், இஸ்ரேல் விடுவிக்கவுள்ள 90 பாலஸ்தீனர்களின் பெயர்களையும் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே வௌியிட வேண்டும்.
இதில் இஸ்ரேல் ஏற்கனவே நேற்று முன்தினம் 90 பாலஸ்தீனர்களின் பட்டியலை வௌியிட்டு விட்டது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க உள்ள பணய கைதிகளின் பெயர்களை இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணி வரை (இஸ்ரேல் நேரப்படி காலை 10.30 மணி) வௌியிடவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணய கைதிகளின் பெயர்களை வௌியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விடுவிக்கப்பட உள்ள 3 பணய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வௌியிடும் வரை காசா பகுதியில் போர் தொடரும் என தெரிவித்தார். பிரதமரின் இந்த கூற்றை உறுதி செய்யும் விதமாக வடக்கு, மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேரும், தெற்கு நகரமான கான் யூனிஸ் மீதான தாக்குதலில் 8 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு, விடுவிக்கப்படும் ரோமி கொனின்(24), ஏமி டமாரி(28) மற்றும் டோரன் ஸ்டான் பிரிசர்(31) ஆகிய பெண் பணய கைதிகள் பெயர் பட்டியலை ஹமாஸ் வௌியிட்டது. இதையடுத்து இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.45 மணி (இஸ்ரேல் நேரம் நேற்று காலை 11.45 மணி) முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து ஹமாஸ் அறிவித்தபடி 3 இஸ்ரேலிய பெண் பணய கைதிகள் நேற்று இரவு இந்திய நேரப்படி 8.55 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால் பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.
The post 3 பெண் பணய கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்: பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம் appeared first on Dinakaran.