புதுடெல்லி: மக்களவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகையில்,’ இந்தியா மற்றும் சீனாவின் இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள். நம்முடைய நிலப்பரப்பின் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் சீனா அமர்ந்திருக்கிறது. நமது வெளியுறவுச் செயலர் சீனத் தூதருடன் கேக் வெட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு நான் சிறிது நேரம் அதிர்ச்சியடைந்தேன்.
கேள்வி என்னவென்றால், சீனா ஆக்கிரமித்துள்ள இந்த 4,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் உண்மையில் என்ன நடக்கிறது?. கல்வானில் 2020ல் 20 ஜவான்கள் வீரமரணம் அடைந்தனர். கேக் வெட்டி அவர்களின் தியாகத்தை வெளியுறவுத்துறை கொண்டாடியது. நாங்கள் இயல்பு நிலைக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அதற்கு முன் உரிய நிலைமை இருக்க வேண்டும். எங்கள் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆனால் சீன மக்களுக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் கடிதம் எழுதியது எனது கவனத்திற்கு வந்துள்ளது.
சீன தூதர் தான் இந்திய மக்களிடம், பிரதமரும் குடியரசு தலைவரும் கடிதம் எழுதியுள்ளனர் என்று கூறுகிறார். மறுபுறம் எங்கள் நட்பு நாடான அமெரிக்கா திடீரென எங்கள் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளது. நம் மீது சுமத்தியுள்ள இந்த கட்டணங்கள் குறித்து என்ன செய்யப்படும் என்பதற்கு இந்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்றார்.
மோடி பிரதமராக இருப்பது அதிர்ஷ்டம்
ராகுல்காந்தி பேச்சுக்கு பாஜ எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில்,’அக்சாய் சின் பகுதியை சீனா யாருடைய ஆட்சியில் ஆக்கிரமித்தது?இந்தி-சீனி பாய் பாய் என்று பேசிக்கொண்டே எங்கள் முதுகில் குத்தினார்கள். டோக்லாம் நேரத்தில் சீன அதிகாரிகளிடம் சீன சூப் சாப்பிட்டு இந்திய ராணுவத்தினருடன் நிற்காமல் இருந்த தலைவர் யார்?. சீன அதிகாரிகளிடம் பணம் வாங்கிய அறக்கட்டளை எது? ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலம் எதற்காக பணம் எடுத்தார்கள்? ஆனால் மோடி ஆட்சியில், டோக்லாமில் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது என்று சொல்லலாம். பிரதமர் எல்லைக்கு சென்று ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தினார். பாதுகாப்பு அமைச்சரும் சென்றார். ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியவில்லை. சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக சீனாவுடன் கூட்டு சேர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்’ என்றார்.
பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, ‘இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியாக இருப்பது நாட்டின் அதிர்ஷ்டம். அமெரிக்க அதிபர் மோடியை நண்பர் என்கிறார். ஆஸ்திரேலிய பிரதமர் அவரை முதலாளி என்று அழைக்கிறார், பப்புவா நியூ கினியா பிரதமர் அவரது கால்களைத் தொடுகிறார். இதுதான் நிலைமை. உங்களைப் போன்ற பலவீனமான பிரதமர் ஆட்சிக்காலத்தில், திபெத் சீனாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தி கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுத்தார். உங்களைப் போன்ற பலவீனமான பிரதமரை கொண்டவர்களுக்கு இது தற்போது நேருவின் நாடு அல்ல. நாம் சீனாவுக்கு ஒரு அங்குலம் கூட கொடுக்கவில்லை. பிரதமர் மோடி எங்கள் பிரதமர் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், உலகம் முழுவதும் அவருக்கு தலைவணங்குகிறது’ என்றார்.
The post 4000 சதுர கிமீ நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது: மக்களவையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.