போபால்: மத்தியபிரதேசத்தில் 5 ஆண்டுகள் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து, 8 மாதங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் திருமணம் செய்யாமல் லிவ் இன் முறையில் வாழ்ந்த ஸ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் 2022 மே மாதம் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து எடுத்துச்சென்று காட்டுக்குள் வீசினான். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் படிதார். உஜ்ஜைனியை சேர்ந்தவர். திருமணமான இவர் பிங்கி பிரஜாபதி(30) என்ற பெண்ணுடன் லிவ் இன் முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்கள் கடந்த 2023ம் ஆண்டு திரேந்திரா என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்தனர். ஆனால் கடந்த ஆண்டு திடீரென வீட்டை காலி செய்துவிட்டனர்.
ஆனால், வீட்டில் ஒரு அறையில் சஞ்சய் தனது பொருள்களை போட்டு வைத்திருந்தார். அந்த வீட்டை திரேந்திரா திடீரென வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். புதிதாக வாடகைக்கு வந்தவர், வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதனை திறந்து காட்டும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டார். அவரும் அந்த அறையை திறந்து காட்டினார். உள்ளே சஞ்சய் பொருள்கள் இருந்தது. உடனே, அந்த அறைக்கான மின் இணைப்பை துண்டித்துவிட்டு கதவை பூட்டினர். அடுத்த ஓரிரு நாளில் அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. அந்த அறையை திறந்து உள்ளே இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது.
நகைகள் அணிந்து, கழுத்தில் கயிற்றுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில், சிதைந்த உடல் காணப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது அது பிங்கி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது காதலன் சஞ்சய் கைது செய்யப்பட்டார். இக்கொலை ஜூன் அல்லது ஜூலை மாதம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பிங்கி தன்னை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதால், ஏற்கனவே திருமணமான சஞ்சய், தனது நண்பரின் உதவியுடன் பிங்கியை கொலை செய்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நண்பரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post 5 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் காதலியை கொன்று 8 மாதங்கள் பிரிட்ஜில் வைத்த காதலன்: நண்பருடன் சேர்ந்து கொடூரம் appeared first on Dinakaran.