மும்பை: காதல் திருமணம் செய்து கொண்ட காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப், விளையாட்டு உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் ஒன்றாகப் பயிற்சி பெற்ற இவர்கள், நீண்ட கால நண்பர்களாக இருந்து காதலித்து, 2018ல் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, 2015ல் உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அதேபோல், பருபள்ளி காஷ்யப்பும் 2014 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இவர்களது திருமணம் இந்திய விளையாட்டு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆறு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக சாய்னா நேவால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று உருக்கமாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, நானும் காஷ்யப்பும் பிரிய முடிவு செய்துள்ளோம். எங்களுக்காகவும், ஒருவருக்கொருவராகவும் அமைதியை தேர்ந்தெடுக்கிறோம்.
இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், தனக்குக் கடுமையான மூட்டுவலி இருப்பதாகத் தெரிவித்திருந்த சாய்னா, தனது விளையாட்டு எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சாய்னாவின் பிரிவு குறித்து காஷ்யப் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
The post 6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி appeared first on Dinakaran.