சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான ஆண்டு இறுதித் தேர்வு இன்றுடன் முடிவடைவதை அடுத்து நாளை முதல் 6-9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கோடைவிடுமுறை என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள் ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஜுன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்பட மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் உயர் வகுப்புகளான பிளஸ்1, பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன. மேனிலை வகுப்புகளுக்கு மார்ச் 3 மற்றும் 5ம் தேதிகளில் தொடங்கிய தேர்வுகள் மார்ச் 25 மற்றும் 27ம் தேதியுடன் முடிவடைந்தன.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வுகளில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்து சுமார் 25 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடவும் தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளி நாட்கள் இருப்பதால், கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் இறுதி வரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், கோடை வெயில் காரணமாக முன்னதாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 17ம் தேதிக்குள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி ஏப்ரல் 17ம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடித்து 5ம் வகுப்பு வ ரையிலான மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் இன்னும் பள்ளிகளுக்கு சென்று தேர்வுகளில் பங்கு பெற்று வருகின்றனர். அவர்களுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து நாளை முதல் அவர்களுக்கும் கோடைவிடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜுன் 2ல் பள்ளிகள் திறக்கின்றன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வு இன்றுடன் (24ம் தேதி) முடிவடைய உள்ளது.
இதையடுத்து, 25ம் தேதி முதல் மேற்கண்ட பள்ளி மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளி இறுதி வேலை நாள் 30ம் தேதி என அறிவிக்கப்படுகிறது. அடுத்த 2025-2026ம் கல்வி ஆண்டு 2.6.2025 அன்று தொடங்குகிறது. அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும். எனவே ஜூன் 2ம் தேதி அன்று பள்ளிகள் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்ெகாள்ள உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கோடை வெயில் காரணமாக, ஏப்ரல் 17ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடித்து 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
* அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான தேர்வுகள் இன்றுடன் முடிகிறது.
The post 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை; ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.