திருமலை: பாழடைந்து 7 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வீட்டுக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளி சந்தை பகுதியில் பாழடைந்த நிலையில் ஒரு வீடு உள்ளது. பூட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் மனித எலும்புக்கூடு இருப்பதாக ஒரு வாலிபர், தனது பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதையறிந்த போலீசார், உடனடியாக வீடியோ வெளியிட்ட நபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில், சுமார் 20 வயதுள்ள வாலிபர் அந்த வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது பந்து ஜன்னல் வழியாக வீட்டிற்குள் விழுந்துள்ளது. பந்தை எடுக்க சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பந்தை எடுக்க முயன்றபோது வீட்டின் ஒரு மூலையில் எலும்புக்கூடு இருப்பதை கண்டுள்ளார்.
மேலும், அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த மறுநாளும் அந்த வாலிபர் அங்கு சென்று வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் என தெரிய வந்தது. இந்த தகவலின்பேரில் போலீசார், தடயவியல் குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, எலும்புக்கூட்டை மீட்டு தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக யாரும் வசிக்கவில்லை. வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிய வந்தது. எனவே, எலும்புக்கூடாக இருப்பவர் யார்? இவர் எப்படி இறந்தார் என விசாரித்து வருகிறோம் என்றனர்.
The post 7 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பாழடைந்த வீட்டுக்குள் மனித எலும்புக்கூடு: ஐதராபாத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.