டெல்லி : 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பள்ளிகளின் மூலம் புதுப்பிக்க ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லாமல், எதுவும் கிடைக்காது என்ற அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அது மிக அவசியமாக இருப்பதால், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம். இந்த நிலையில் 7 வயதை அடைந்த குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
தற்போது ஆதார் விதிகளின்படி ஒரு குழந்தை 5 வயதை அடையும் போது, கைரேகை, கருவிழி, புகைப்படம் ஆகிய விவரங்கள், அந்த குழந்தையின் ஆதார் அட்டையில் கட்டாயமாக புதுப்பிக்கப்பட வேண்டும். 5 முதல் 7 வயது வரையிலான கால கட்டத்தில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பிற்கு கட்டணம் கிடையாது. ஆனால் 7 வயதுக்கு பிறகு ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஒரு ஆதார் சேவை மையம் அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்தில் புதுப்பிக்கலாம்.
7 கோடி குழந்தைகளின் பயோ மெட்ரிக் விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ள ஆதார் ஆணையம், எனவே அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலம் இந்த விவரங்களை பகுதிப்பகுதியாக திரட்ட முடிவு செய்து இருப்பதாக அறிவித்துளளது. இதற்கான முன்னேடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள ஆதார் ஆணையம், பெற்றோர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
The post 7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!! appeared first on Dinakaran.