புதுடெல்லி: இன்று 76வது குடியரசு தின விழாவையொட்டி, நாட்டின் ராணுவ பலத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் டெல்லி பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார். இந்தியாவின் 76வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின விழாவிற்கு தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். தேசிய போர் நினைவிடத்தில் நாட்டிற்கான உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவார். அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடமைப் பாதையில் ராணுவ அணிவகுப்பு தொடங்கும்.
இதில் இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் பிரமோஸ் ஏவுகணை, பினாகா மற்றும் ஆகாஷ் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை, போர்க்கள கண்காணிப்பு அமைப்பான சஞ்சய், டிஆர்டிஓவின் தயாரிப்பான பிரலே ஏவுகணை உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் முதல் முறையாக இடம் பெற உள்ளன. மேலும், டி-90 பீஷ்மா டாங்கிகள், ஷார்ட் ஸ்பான் பிரிட்ஜிங் சிஸ்டம் 10மீ, நாக் ஏவுகணை அமைப்பு, மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம் அக்னிபான் மற்றும் பஜ்ரங் ஆகியவை அணிவகுப்பில் இடம் பெற உள்ளன. உபி, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, சண்டிகர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 அலங்கார வாகனங்களும், ஒன்றிய அமைச்சகங்கள், துறைகள் சார்பில் 15 அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் இடம் பெறுகின்றன.
மேலும், முப்படைகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக ‘வலிமையான, பாதுகாப்பான இந்தியா’ என்ற கருப்பொருளில் முதல் முறையாக ராணுவம், கடற்படை, விமானப்படைகள் இணைந்து தயாரித்த அலங்கார ஊர்தி இடம் பெற உள்ளது. இந்த ராணுவ அணிவகுப்பு சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும். இறுதியாக விமானப்படையின் 40 போர் விமானங்களும், கடற்படையின் 3 போர்னியர் விமானங்களும் வான் சாகச நிகழ்ச்சியை மேற்கொள்ளும். குடியரசு தினவிழாவில், நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கிராம தலைவர்கள், அங்கான்வாடி ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட 10,000 சாமானியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி முழுவதும் 70 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள், 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர்
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ கலந்து கொள்கிறார். அந்நாட்டின் ராணுவ குழுவும், இசைக்குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது. இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 4வது இந்தோனேசிய அதிபர் சுபியந்தோ என்பது குறிப்பிடத்தக்கது.
942 போலீசாருக்கு பதக்கம்
குடியரசு தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 942 போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் இன்று வழங்கப்படுகிறது. இதில் மணிப்பூர் கலவரம், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை, நீட் முறைகேடு விவகாரம் போன்ற பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை திறம்பட விசாரித்த 31 சிபிஐ அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது.
கேரள நுண்ணறிவுத்துறை ஏடிஜிபிக்கு ஜனாதிபதி விருது
கேரள நுண்ணறிவுத்துறை ஏடிஜிபி விஜயனுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2005ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுவிக்க கோரி கொச்சியில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கு, சபரிமலை முன்னாள் தந்திரியான கண்டரர் மோகனர் தாக்கப்பட்ட வழக்கு ஆகிய வழக்குகளை இவர் தான் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post 76வது குடியரசு தின விழா; டெல்லியில் இன்று பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு: ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார் appeared first on Dinakaran.