புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள 8வது சம்பள கமிஷனில் 1.92 மடங்கு முதல் 2.86 மடங்கு வரை சம்பளம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசு ஊதியக்குழு அமைக்கும். அந்த அடிப்படையில் 8வது சம்பளக்கமிஷன் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புதிய ஊதியம் 2026ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு, அதை பின்பற்றி மாநில அரசுகளும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தும். அதனால் நாடு முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் 8வது சம்பளக்கமிஷன் பரிந்துரை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. 8வது சம்பளக்கமிஷனை ஒன்றிய அரசு அடுத்த மாதம் அமைக்கலாம் என்று நிதித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 7வது ஊதியக் குழு 2016ல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒன்றிய அரசுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவானது.
அப்போது பிட்மென்ட் காரணி என்று கூறப்படும் சம்பள உயர்வைக் கணக்கிடப் பயன்படும் ஒரு கணக்கீடு அடிப்படையில் 7வது ஊதியக்குழுவில் அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, 8வது ஊதியக் குழு, பிட்மென்ட் காரணியை 3 அல்லது அதற்கு மேல் உயர்த்தினால், அரசு ஊழியர்கள் கணிசமான சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டதும், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் பிறதுறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பிட்மென்ட் காரணி 7வது ஊதியக் குழுவைப் போலவே 2.57 மடங்கு அல்லது அதற்கும் அதிகமாக 2.85 மடங்கு நிர்ணயிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில் 8வது ஊதியக்குழு பரிந்துரையில் பிட்மென்ட் காரணி 1.92க்கு நெருக்கமாக இருக்கும் என்று கணித்துள்ளார். இதை பார்க்கும் போது 8வது ஊதியக் குழுவின் கீழ் பிட்மென்ட் காரணி 1.92 முதல் 2.86 மடங்கு வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படையில் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் எக்கச்சக்கமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.18 ஆயிரமாக இருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.51,480ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* 1946ல் ரூ.55 இப்போ ரூ.18 ஆயிரம் இனி ரூ.51 ஆயிரமா?
1946ல் மாதம் ரூ 55 அடிப்படை சம்பளமாக இருந்தது. தற்போது மாதம் ரூ 18,000 ஆக உயர்ந்துள்ளது. 8வது ஊதியக் குழுவின் கீழ், புதிய பிட்மென்ட் காரணியின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய குறைந்தபட்ச சம்பளமான ரூ. 18,000 ஐ விட 186% அதிகமாகும்.
நிலை 1 முதல் நிலை
10 வரை தோராய பட்டியல்
தற்போதை சம்பளம் எதிர்பார்ப்பு வித்தியாசம்
நிலை 1 ரூ.18,000 ரூ.51,480 ரூ.33,480
நிலை 2 ரூ.19,900 ரூ.56,914 ரூ.37,014
நிலை 3 ரூ.21,700 ரூ.62,062 ரூ.40,362
நிலை 4 ரூ.25,500 ரூ.72,930 ரூ.47,430
நிலை 5 ரூ.29,200 ரூ.83,512 ரூ.54,312
நிலை 6 ரூ.35,400 ரூ.1,01,244 ரூ.65,844
நிலை 7 ரூ.44,900 ரூ.1,28,414 ரூ.83,514
நிலை 8 ரூ.47,600 ரூ.1,36,136 ரூ.88,536
நிலை 9 ரூ.53,100 ரூ.1,51,866 ரூ.98,766
நிலை 10 ரூ.56,100 ரூ.1,60,446 ரூ.1,04,346
எவ்வளவு ஒதுக்கினால் எவ்வளவு கிடைக்கும்?
தற்போது ஒன்றிய அரசு ஊழியர் சராசரியாக மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெற்றால் ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு:
ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு சம்பள உயர்வு
ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கீடு சம்பளம் மாதம் ரூ.1,14,600 ஆக உயரலாம்.
ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு சம்பளம் மாதம் ரூ.1,16,700 ஆக உயரலாம்.
ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு சம்பளம் மாதம் ரூ.1,18,800 ஆக அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு கமிஷனிலும்
எவ்வளவு கிடைத்தது?
1947-முதல் சம்பளக்குழு: ரூ.55
1959-2வது சம்பளக் குழு: ரூ.80
1973-3வது சம்பளக் குழு: ரூ.185
1986-4வது சம்பளக் குழு: ரூ.750
1997-5வது சம்பளக் குழு: ரூ.2550
2008-6வது சம்பளக் குழு: ரூ.7000
2016-7வது சம்பளக் குழு: ரூ.18,000
The post 8வது சம்பள கமிஷனில் தாராள எதிர்பார்ப்பு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.51 ஆயிரமாக உயர வாய்ப்பு appeared first on Dinakaran.