சென்னை: இன்றைய டிஜிட்டல் சூழ் உலகில் இணைய இணைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என சிவாஜி கணேசனின் திருவிளையாடல் படத்தின் பாடல் வரிகள் அப்படியே கச்சிதமாக இணையத்துக்கு பொருந்தும். அந்த அளவுக்கு உலகை இணைய சேவை இயக்கிக் கொண்டிருக்கிறது.
உணவு ஆர்டர் செய்ய, விண்வெளி உட்பட வீடியோ அழைப்பு மேற்கொள்ள, நமக்கு வேண்டிய தகவல் அல்லது பதில்களை தேடி பெற, பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்க என மனித வாழ்வின் சர்வமும் இணையமயம் ஆகியுள்ளது. நமது மெய்யான தேடல் கூட இணையம் சார்ந்தே உள்ளது. இருந்தாலும் இதெல்லாம் இப்போதுதான். கடந்த சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்த நிலை இல்லை.